உத்தரகாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயமடைந்துள்ளார்.
ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்போது காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்த நிலையில் ரூர்கி பகுதியிலுள்ள ஷாக்சம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் ரிஷப் பண்ட் உள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்தது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதேவேளை, ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.