காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் முடிக்க, 10 பவுன் நகை மற்றும் பணத்தோடு தப்பியோடியிருக்கிறார், புதுப்பெண்.சென்னை அடுத்துள்ள பள்ளிகாரணையில் வசித்து வருபவர் 32வயதான தமிழ்வாணன்.சேலத்தைப் பூர்வீகமாக கொண்டவர், நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் மகேஷ் என்பவர் மூலம் தமிழ்வாணனுக்கு விருதுநகரில் உள்ள பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி அப்பெண்ணைப் பார்ப்பதற்காக விருதுநகர் முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார்.

அங்கு வைத்துத்தான் இருவரும் முதன்முதலாகச் சந்தித்து கொண்டனர்.பெயர் பூஜா. 36 வயதை கடந்த பெண். பார்த்ததும் பிடித்துவிட்டதாக தமிழ்வாணன் சொல்ல, பூஜாவும் அதற்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார்.பிறகு என்ன அடுத்த கட்ட வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என புரோக்கர் அடியெடுத்து வைக்க, பெண்ணை புக் செய்ய, 2 லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசியிருக்கிறார்.

எதற்கு பணம் கேட்கிறார் ? என்று சிறிதும் யோசிக்காத தமிழ்வாணனின் குடும்பத்தினர், அப்படி இப்படி என கடைசியாக 1.35 லட்சத்திற்கு பேரம் பேசி பணத்தை அங்கேயே கொடுத்துள்ளனர்.பின்னர் உறவினர்கள் யாருமின்றி திடீரென திருமணம் நடைபெற்றதால் கையோடு மனைவியுடன் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டார் தமிழ்வாணன்.

மறுநாள் இரவே புறப்பட்டு சென்னை பள்ளிகரணையில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடம் வந்துள்ளார்.இதனையடுத்து துணிக்கடைக்குச் சென்று மனைவிக்கு ஆசை ஆசையாக 10 ஆயிரம் ரூபாய்க்கு புது புடைவைகளை எடுத்து கொடுத்திருக்கிறார்.

மேலும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பிரபல கடைக்கு சென்றவர்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு எஸ்கலேட்டரில் கீழிறங்க முயன்றனர்.அப்போது தனக்கு எஸ்கலேட்டர் என்றால் பயம் என்றும்; அதனால் நீங்கள் மட்டும் போங்கள் நான் படிக்கட்டில் கீழிறங்கி வருகிறேன் என்றும் பூஜா சொல்லியிருக்கிறார்.

பிறகும் கீழே வந்த தமிழ்வாணன் மனைவி பூஜாவிற்காக காத்திருக்க , எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளார்.பூஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.பதட்டத்தில் வீட்டிற்கு சென்று பார்க்கையில், வீட்டிலிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணமும் ; பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து , 10 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தலைமறைவாக உள்ள பூஜாவை கண்டுபிடித்துத் திருடுபோன தங்க நகையை மீட்டு தர வேண்டும் என போலீசில் புகார் அளித்திருக்கிறார்.முதலிரவு அன்று அறைக்குள் சென்ற தமிழ்வாணனிடம் மனைவி பூஜா மதுபாட்டில் கேட்டதாகவும் ; அதற்கு அவர் இதெல்லாம் தவறு, திருமணத்திற்கு முன்பு நீ எப்படி இருந்தாய் என தெரியாது, இனிமேல்

இதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு விடு என்று கூறியதாகவும் தெரிவித்தார். இறுதியாக மாதவிடாய் நாள் என்று கூறி முதல் இரவையும் தள்ளிப் போட்டிருக்கிறார், பூஜா என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares