தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது காண்டாமிருக வண்டு. இதன் தாக்குதல் தென்னை மட்டுமின்றி பாக்கு, எண்ணெய்ப் பனை, ஈச்சை மரம் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
தாக்குதலின் அறிகுறி
காண்டாமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தினை துளையிட்டு உள்ளே இருக்கும் மொட்டு பகுதியை தின்று விடும், இதனால் எஞ்சிய குருத்து விரியும்போது தென்னை மட்டை முக்கோண வடிவில் சீராக கத்திரியால் வெட்டியதுபோல் இருக்கும், மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது. சில சமயங்களில் இளம் கன்றுகளின் குருத்து அழிந்து விடுவதனால் மரம் வளர்ச்சி குன்றி காணப்படும்
காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த
தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள் புழுக்கள், கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
இரவு நேரங்களில் விளக்குப் பொறியினை தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியினை ஏக்ருக்கு 5 எண்கள் என வைத்து வண்டுகளை அதிக அளவில் கவர்ந்து அழிக்கலாம்
வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1:2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் அல்லது ரசகற்பூரம் (அந்து உருண்டை) 3 எண்களை நடுகுருத்தின் மட்டை இடுக்குளில் வைக்கலாம்.
ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
மெட்டாரைசியம் , பிவேரியா இரண்டையும் ஒரு மரத்துக்கு 10 + 10 கிராம் வீதம் எடுத்து ஓட்டை உள்ள பகுதியில் போட்டு மூடி விடலாம்.. அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 + 5 கிராம் அளவு எடுத்து நன்கு கரைத்து தெகுருத்து பகுதியில் ஊற்றி விடவேண்டும்